சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.
இந்த விழாவையொட்டி கோவிலில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.
இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 4.10 மணிக்கு முதலில் பூசாரி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து முதன்மைச் செயலாளர் அமுதா குண்டம் இறங்கினர். அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, குண்டம் இறங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM