புதுச்சேரி, : புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, எம்.எல்.ஏ. மற்றும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை, பயணிகள் அமர இருக்கை என அடிப்படை வசதிகள் இல்லை.
பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளிடம் திருட்டு சம்பவமும் அதிகரித்து வருகிறது.பஸ் நிலையத்திற்குள் புதிது புதிதாக பெட்டிக் கடைகள் முளைத்து வருகின்றன. இது தொடர்பாக நேரு எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.இதைத் தொடர்ந்து நேரு எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், ‘ஸ்மார்ட் சிட்டி’ செயல் அதிகாரி அருண், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் நேற்று புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர்.பின்னர் கலெக்டர் வல்லவன் கூறியதாவது:பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓரளவுக்கு குடிநீர் வசதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழுதாகி உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சேதமடைந்துள்ள இருக்கைகளை புதுப்பித்து, நிறுவப்படும். கழிவறைகள் சுத்தமாக உள்ளது. இருந்தபோதும் பெரு நகரங்களுக்கு இணையாக, விமான நிலையத்தில் உள்ளதுபோல் கழிவறைகளை பராமரிப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளோம்.பஸ் நிலையத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் எந்தெந்த திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என தரவுகள் திரட்டி, செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement