பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் பூஜா. 18 வயதான இவர், தனது வீடு அருகில் உள்ள தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு கும்பல் பூஜாவை கடத்த முயற்சி செய்துள்ளது.
கடும் எதிர்ப்பு தெரிவித்த பூஜா, கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த கும்பல் கோபடைந்து பூஜைவை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
பாகிஸ்தான் அடிக்கடி சிறுபான்மை சமூகத்தினர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். வலுக்கட்டயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யப்படும் இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்.
2013-ல் இருந்து 2019 வரை இதுபோன்ற 156 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான மக்கள் ஆணையம் இதை தெரிவித்துள்ளது.
சிந்து மாகாண அரசு 2019-ம் ஆண்டு இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக 2-வது முறை சட்டம் கொண்டு வந்தது. அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் போராட்டக்காரர்கள் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகையில் 1.60 சதவீதம் இந்துக்கள் வசிக்கின்றனர். இதில் 6.51 சதவீதம் பேர் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.