திருவனந்தபுரம்: குடும்ப தகராறு காரணமாக பாஜ நிர்வாகி மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாம்பாடி பகுதியை வந்தவர் வினீஷ் (49). மீனடம் பகுதி பாஜ செயலாளராக இருந்தார். அவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியின் மகள் பார்வதி (17). மகன் விஷ்ணு. இதற்கிடையே நேற்று முன்தினம் வினீஷ், மகள் பார்வதியை அழைத்துக்கொண்டு இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே குழித்தாளுவில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் தந்தையும், மகளும் திரும்பி வரவில்லை. இதையடுத்து மனைவி திவ்யா பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் வினீஷ் போனை எடுக்கவில்லை. விசாரணையில் 2 பேரும் தாய் வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து திவ்யா பாம்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் வினீஷின் செல்போன் டவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து பாம்பாடி போலீசார் அடிமாலி அருகே உள்ள வெள்ளத்தூவல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் வினீஷின் பைக் அங்குள்ள கல்லார்குட்டி அணைக்கு அருகே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வினீஷும், அவரது மகளும் அணையில் குதித்திருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அடிமாலி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணையில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுலுக்கு பிறகு வினீஷ், அவரது மகள் பார்வதி ஆகியோரது உடலை மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளத்தூவல் போலீசாரின் விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக வினீஷ் மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.