புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக இன்று அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளதாவது:
அனைவருக்கும் வீடு எனும் இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை 2016 ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி சிறந்த வீடுகளைக் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டின் போது 80 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று 2022-23-ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார்.
இதில் கிராமப் பகுதிகளில் 52 லட்சம் வீடுகளும், நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகளும் என 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. இதற்காக ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் 16ந்தேதி நிலவரப்படி 2.28 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.75 கோடி வீடுகளுக்கான பணிகள் ஏற்கனவேநிறைவடைந்துள்ளன. 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 52.78 லட்சம் வீடுகளுக்கான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.