புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் 30-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார் என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: “புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23-ல் நடந்தது. அக்கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக வரும் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.
அக்கூட்டத்தொடரில் 2022-23-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார். இது தொடர்பான கோப்பு ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தர முதல்வர் மத்திய அரசை கேட்டுள்ளார். அத்தொகை கிடைத்தபிறகு முழு பட்ஜெட் தாக்கலாகும்.
அரசு திட்டங்களை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். குறிப்பாக, காரைக்கால் ஆட்சியர் உட்பட பலர் மீது இக்குற்றச்சாட்டு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவரான எனக்கு அதிகாரமுள்ளது.
சட்டப்பேரவை கட்டுமானத்துக்காக ஐந்து மாநில சட்டப்பேரவை கட்டடங்களை பார்வையிடவுள்ளோம். முதலாவதாக வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் கோவாவுக்கும், அதைத் தொடர்ந்து பெல்காம், அமராவதி என்று சென்று பேரவைக் கட்டடங்களை பார்வையிடுவோம். உடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் வருகிறார்கள்” என்றார்.
பின்னர், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வரிவிலக்கு கோரி பாஜகவினர் முதல்வரிடம் மனு தந்தபோது உடன் இருந்தீர்களே என்று நிபுணர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முதல்வர் அலுவலகத்தில் நான் இருந்தபோது பாஜகவினர் வந்தனர். அவர்களுடன் நான் முதல்வர் அலுவலகத்திற்கு செல்லவில்லை” என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.