புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கின. ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் வரும் விலை உயராமல் இருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு நேற்று 80 காசுகள் உயர்ந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடந்து வரும் நிலையில் நேற்று மக்களவையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எதிர்கட்சிகள் எழுப்பினார்கள். கேள்வி நேரத்தின்போது விலை உயர்வு விவகாரத்தை எதிர்கட்சிகள் எழுப்ப முயன்றனர். ஆனால் இதனை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. கேள்வி நேரத்துக்கு பின் இந்த விவகாரத்தை எழுப்பும்படி அறிவுறுத்தினார். கேள்வி நேரத்துக்கு பின் பேசிய காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘தேர்தல் நடைமுறைக்கு பின் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்கட்சிகள் கூறி வந்தன. அதேபோல் தற்போது விலை உயரத்தொடங்கியுள்ளது’’ என்றார். விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் இடது சாரிகள் முழக்கமிட்டனர். பின்னர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல மாநிலங்களவை தொடங்கியதும் எதிர்கட்சிகள் விலை உயர்வு விவகாரத்தை எழுப்பினார்கள். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து இடையூறு ஏற்படுத்தினார்கள். விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டுமென திரிணாமுல் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அவை தலைவர் வெங்கய்ய நாயுடு இதனை ஏற்க மறுத்தார். சம்பந்தப்பட்ட அமைச்சங்களின் மானிய கோரிக்கைகளின்போது இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என்றார். ஆனால் உறுப்பினர்கள் இதனை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 12ம ணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அவை 12 மணிக்கு மீண்டும் தொடங்கியதும் மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் கேள்வி நேரத்தில் பட்டியலிடப்பட்ட விவகாரங்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று எதிர்கட்சி உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார். முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பக்வந்த் குமா பதிலளித்துக்கொண்டு இருந்தார். ஆனால் அவரை தொடரவிடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. அவை துணை தலைவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரைனை அவரது கட்சி எம்பிக்களை இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். எனினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எரிவாயு மீதான லாக்டவுன் நீக்கம்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘சமையல் எரிவாயு, டீசல் மற்றும பெட்ரோல் விலை மீதான லாக்டவுன் நீக்கப்பட்டது’’ என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார்.சாதனை தவறியதுபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது 8 நாட்கள் மாநிலங்களவை எந்த இடையூறும் இன்றி செயல்பட்டது. இதேபோல் இரண்டாவது கூட்டத்தொடரில் 4 நாட்களும் அவையில் ஒத்திவைப்பு இன்றி இயங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் அவை எந்த சலசலப்பும் இல்லாமல் தொடர்ந்த நிலையில் எரிபொருள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக நேற்று அவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எனினும் மதிய உணவுக்கு பின் அவை தொடங்கியதும் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக செயல்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு 249வது மழைக்கால கூட்டத்தொடரில் 13 நாட்கள் அவை ஒத்திவைப்பு இன்றி செயல்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் அவை நேற்று முடங்கிவிட்டது.