புதுடெல்லி:
வீட்டு உபயோக பயன் பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 50 இன்று அதிகரித்துள்ளது. இதேபோல 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நடந்தது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
ஹோலி பண்டிகையையொட்டி பாராளுமன்ற இரு அவைகளுக்கு கடந்த 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. விடுமுறைக்கு பிறகு நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது.
சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மேல் சபையில் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தனர்.
இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். மேல்சபையில் இதை விவாதிக்க வேறு அவகாசம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு பொது மக்களை பெரிதளவு பாதிக்கிறது என்றும், உடனடியாக அதை விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறி தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனால் அவை தலைவர் வெங்கையா நாயுடு சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
12 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2-வது முறையாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மக்களவையிலும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்… ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்