'பைக் ரேஸ்' விவகாரம்: பெற்றோர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை!

ரேஸில் ஈடுபடும் வகைகளில் பைக்குகளை மாற்றித்தரக் கோரும் நபர்கள் குறித்த விவரங்களை மெக்கானிக்குகள் உடன் அந்தந்த காவல் நிலையங்களில் தெரிவிக்க சென்னை காவல் துறை உத்தரட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுதல் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 19.03.2022 அன்று நள்ளிரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டு தொடர்பான வீடியோ வெளியானது. இது தொடர்பாக அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
image
அதன் பேரில், வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது பைக் வீலிங்கில் ஈடுபட்ட திருவிக. நகரைச் சேர்ந்த முகேஷ், ரோமன் அல்கிரேட், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹரிகரன், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த முகமது சாதிக், முகமது ரஹமத்துல்லா, முகமது ஆசிப் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விலையுயர்ந்த கே.டி.எம் பைக், 4 யமஹா, 1 ஆக்டிவா என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
image
இருசக்கர வாகனங்களை மாற்றியமைப்பதும் (Modify) சட்ட விரோதமானது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் (Mechanic) அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஷஅதேபோல் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம். இவ்வாறு இளஞ்சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், இளஞ்சிறார்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் காயங்கள் உண்டாகி, அசாம்பவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள், 18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.