ஹாமில்டன்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, இன்று (மார்ச் 22) வங்கதேச அணியுடன் மோதியது.
ஹாமில்டன் நகரில் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி துவக்கம் தந்தது. ஓரளவு நல்ல துவக்கம் தந்த நிலையில், மந்தனா (30), ஷபாலி (42), அடுத்து வந்த மிதாலி ராஜ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யஸ்திகா பாட்டியா மட்டும் ஒருமுனையில் போராடி அரைசதம் எட்டி அவுட்டானார். ஹர்மன்பிரீத் கவுர் (14) ரன் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் (26), ரானா (27) சற்று கைகொடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. பூஜா (30), கோஸ்வாமி (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்களும், நஹிடா அக்தர் 2 விக்கெட்களும், ஆலம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 230 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
Advertisement