மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஆதரவு: உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்ததாக உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விவசாய விளைபொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் இடைத் தரகர்களை ஒழிக்கும் வகையிலும் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களை அறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஷேத்கரி சங்கத்தனா என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் அனில் கன்வத், விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் முன்னாள் தலைவர் அசோக் குலாட்டி, வேளாண் பொருளாதார நிபுணர் பிரமோத் ஜோஷி ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவினர் பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாயி
களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்ட றிந்து தங்களது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை அனில் கன்வத் நேற்று வெளியிட்டார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாய சங்கம் உட்பட 266 விவசாய சங்கங்களுடன் எங்கள் குழு ஆலோசனை நடத்தியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. மேலும், இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளம் மூலம் 19,027 கருத்துக்களும் மற்றும் 1,520 இ மெயில்களும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டன. 3.83 கோடி விவசாயிகளைக் கொண்ட 73 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாகவும் காணொலிக் காட்சி வாயிலாகவும் உரையாடி கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இதில் பெரும்பாலான விவசாய சங்கங்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இந்த விவசாய சங்கங்களில் 3.3 கோடி விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 61 சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன. 51 லட்சம் விவசாயிகளைக் கொண்ட 4 சங்கங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 3.6 லட்சம் விவசாயிகளைக் கொண்ட7 சங்கங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கன்வத் கூறுகையில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக இப்போது உணர்கின்றனர். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது மிகப்பெரிய அரசியல் தவறு. அதனால்தான் பஞ்சாபில் பாஜக மோசமாக தோல்வி அடைந்தது’’ என்றார்.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.