டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு மூலம் மட்டுமே இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என யுஜிசி புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், நடப்பாண்டு (2022-2023) மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் மூலமாகவோ , பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் CUET எனப்படும் common university entrance test மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், யுஜிசி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு ஜூலையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வு நடத்தப்படும். அத்தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இளநிலைப் படிப்புகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
இந்த தேர்வானது, இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமிஸ், பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிவிடும். இந்த தேர்வு கணினியில் விடைகளை தேர்வு செய்யும் முறையில் நடத்தப்படும். இந்த தேர்வை எழுத மாணவர்களுக்கு கணினியில் புலமை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ்குமார், CUET தேர்வின் பாடத்திட்டம் NCERTயின் 12ம் வகுப்பு பாடத்திட்டம் போன்று இருக்கும் என்று கூறியதுடன், இந்த பொது நுழைவுத் தேர்வின் மூலம், மாணவர்கள் வெறுமனே பனிரெண்டாம் வகுப்பில் நல்லமதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் படிக்காமல், பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் படிக்கத் தொடங்குவார்கள் என்று நம்புவதாக கூறினார்.
மேலும், மாணவா் சோ்க்கைக்காக பொதுவான கலந்தாய்வும் நடத்தப்படாது. நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் என்டிஏ தகுதிப் பட்டியலை வெளியிடும். அதனடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவா் சோ்க்கையை நடத்திக் கொள்ளலாம். வேண்டுமானால், மாநில, தனியாா் பல்கலைக் கழகங்களும் பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தலாம்’’ என்று தெரிவித்தவுர், ஒரே நாடு ஒரே பொது நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும். இதனால் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இந்த பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமையே இந்த தேர்வையும் நடத்தும் என்றவர், பொது நுழைவுத் தோ்வு இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நுழைவுத் தேர்வான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் என்றும், வரும் ஜூலை மாதத்தில் ஆன்லைன் மூலமாக இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெற உள்ளது என்றார்.
பொது நுழைவு தேர்வு தேதி, தேர்வு முறை, தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் விவரித்தார்.
நாடு முழுவதும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியின் கீழ் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.