புதுடில்லி:மருத்துவ படிப்புக்கு, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது போல, மத்திய பல்கலைக்கழகங்களில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர, ‘கியூட்’ நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது.
அறிமுகம்
இது குறித்து, யு.ஜி.சி.,எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள, 45 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., மானிய உதவி வழங்குகிறது. இப்பல்கலைகளில், வரும் 2022 – 23ம் கல்வியாண்டு முதல், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, ‘கியூட்’ எனப்படும், பல்கலை கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகமாகிறது.
இத்தேர்வு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் பிளஸ் 2 பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.இத்தேர்வால், இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் நேராது. மத்திய பல்கலைகளின் மாணவர் சேர்க்கைக்கு, இந்த தேர்வு கட்டாயம்.மாநில பல்கலைகள், தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள் தங்கள் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, இந்த தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமமான போட்டிக்களம்
இந்த நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பங்கள் வழங்கப்படும்.இந்த நுழைவுத் தேர்வு, கணினி வாயிலாக நடத்தப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டுள்ள விடைகளில், சரியான விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
தேசிய அளவில் முன்னணி தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர, 100 சதவீத, ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது அபத்தமானது.இந்த பொது தேர்வு வாயிலாக, நாடு முழுதும் உள்ள பல்கலைகளில், மாணவர் சேர்க்கைக்கு சமமான போட்டிக்களம் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.