‘மன்மத லீலை’ கில்மா படம் கிடையாது என்று கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மத லீலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதையொட்டி, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படகுழுவினர் கலந்துகொண்டு பேசினர். அதில் பேசிய, நடிகர் அசோக் செல்வன்,
”காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் ’சென்னை 28’ பார்த்தோம். இப்போது, வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம். கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள். இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி” என்று உற்சாகமுடன் பேசினார்.
”என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதைதான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது இந்தக் கதை வந்தது. அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன். உடனே, ‘ஓகே’ சொன்னார். என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும்” என்று அசோக் செல்வனைத் தொடர்ந்து இறுதியாக பேசி முடித்தார் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.