மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி| Dinamalar

கீவ்: உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போரால் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் கே.ஆர்.ஓ.கே.,- 2 தேர்வை ரத்து செய்து உக்ரைன் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் குறைவு என்பதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் சென்று சேர்கின்றனர். தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெறுவதால் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். தங்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்றத் தன்மையால் பலரும் பயத்துடன் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் உக்ரைன் அரசு இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் லைசென்ஸ் பெறுவதற்கான கே.ஆர்.ஓ.கே., – 2 தேர்வை ரத்து செய்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கே.ஆர்.ஓ.கே.,-1 தேர்வை ஒத்தி வைத்துள்ளது.

உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகும். மூன்றாம் ஆண்டில், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தியல் மாணவர்கள் கே.ஆர்.ஓ.கே., – 1 தேர்வை எழுத வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள், மே மாதம் அந்தந்த பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் பங்குபெற வேண்டும். அதனை முடித்த பின்னர் மருத்துவர் உரிமம் பெற கே.ஆர்.ஓ.கே.,-2 தேர்வை எழுத வேண்டும். தற்போது இத்தேர்வை ரத்து செய்துள்ளதால் இறுதியாண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலே பட்டம் கிடைத்துவிடும். அதனைக் கொண்டு இந்தியாவில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் பங்கேற்க முடியும். அதனை முடித்தால் இந்தியாவில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றலாம்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.