புதுடெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இவ்வழக்குகள் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அணை பாதுகாப்பாக உள்ளது என விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, ‘புதிய வழக்குகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் ஏற்கனவே முக்கிய விவகாரத்தில் இருப்பதால், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எந்த நோட்டீசும் (தமிழக அரசுக்கு) அனுப்ப மாட்டோம்’ என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.