தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாடோடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், தாங்கள் குடும்பமாகச் செல்லும் இடங்களிலேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசிமணி விற்றும், பச்சைக் குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். நாடோடிகளாய் திரியும் இவர்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லை. அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வசித்து வரும் மக்களுக்கும் அடையாளம் உருவாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த 54 நாடோடியின குடும்பத்தில் தகுதியுள்ள 36 பேருக்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் முலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சமீபத்தில் 3 தலைமுறை போராட்டத்துக்குப் பின், அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் அடையாள அட்டை என்பதால் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட போதே, தங்களில் தகுதியானவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் குடும்பம் குடும்பமாக வசித்து வரும் நாடோடியின குடும்பத்தில், தகுதியான 14 குடும்பத்திற்கு ஸ்மார்ட் குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். குடும்ப அட்டையை பெற்றுக் கொண்ட நாடோடியின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “எங்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்துச்சு. 40 வருசப் போரட்டத்துக்குப் பிறகு முதன்முறையா வாக்களிக்கும் உரிமையை அரசு அளித்தது. முதல் முறையா வாக்களிச்சப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தோம். இப்போ குடும்ப அட்டையையும் கலெக்டர் ஐயா கொடுத்திருக்காங்க. இது இன்னும் எங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கு. தெருவோரங்கள்ல வாழ்ந்துட்டு இருக்குற எங்களுக்கு குடியிருக்க அரசாங்கம்தான் எங்களுக்கு வீடு கட்டித் தரணும்” என்றனர்.