புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி தராமல், புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கிடைக்காது என ஆணையத்தின் தலைவர் ஹர்தாலுடனான சந்திப்பிற்கு பின்னர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: “கர்நாடக அரசு மேகதாது அணைக்காக, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது சட்டவிரோதமானது என ஆணையம் அறிவித்திட வேண்டும் என்று இன்று காவிரி ஆணையத்தின் தலைவரிடம் முறையிட்டோம். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் சார்பில் முறையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். தமிழக பகுதிகளை ஆணையத் தலைவர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும், ஆணையக் கூட்டம் மாதம்தோரும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இதற்கு பதிலளித்த ஆணையத் தலைவர் ஹர்தால், “வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு ஜல்சக்தி துறை மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்ததுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்டிருடிருக்கிறோம். தொடர்ந்து ஆணையக் கூட்டத்தில் அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடகம் வலியுறுத்தி வருகிறது. தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்று கூறிய ஆணையத் தலைவர், ஆணையத்தின் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் புதிய அணை கட்டுவதற்கு காவிரி ஆணையம் மத்திய அரசுக்கு தடையில்லா சான்று கொடுக்க முடியும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இவற்றில் ஒரு மாநிலம் எதிர்த்தாலும்கூட கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் அனுமதி அளிக்காது என தலைவர் ஹர்தால் தகவல் தெரிவித்தார்.
எனவே, ஆணையத்தின் தடையில்லா சான்று இல்லாமல் மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதி கொடுக்க முடியாது. தமிழக விவசாயிகள் கர்நாடக அரசு ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. பத்திரிகை ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்துதான் நாங்களும் தெரிந்து கொண்டிருக்கிறோம். எனவே பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இது குறித்து ஆணையத்தின்தான் விரைவில் காவிரி பாசனபகுதிகளை நேரில் பார்வையிட உள்ளது; மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்கிற தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டம் நடத்த ஆணையம் தயங்காது. தற்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆணைய கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் தேவையும் ஏற்படவில்லை என தலைவர் ஹர்தால் தெரிவித்தார்” என்று கூறினார்.