எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக டீசல் வாங்குவோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, லிட்டருக்கு 25 ரூபாய் விலையினை உயர்த்தின. இது மொத்த பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது 43% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!
ஆரம்ப கட்டத்தில் சில்லரை விற்பனையில் விலை அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொத்த கொள்முதல் விலையானது பெரியளவில் ஏற்றம் கண்டது. இது சில்லறை விற்பனையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாவிட்டாலும், மொதத்தமாக வாங்குவோருக்கு பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி அதிகம்
இந்தியா தனது மொத்த பயன்பாட்டில் 85% எண்ணெயினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. ஆக சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலை நெருக்கடியான நிலையானது, இந்திய சந்தையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தால், அது நேரடியாக இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். இதனால் எரிபொருள் விலை எப்போது அதிகரிக்குமோ என்ற அச்சமே இருந்து வந்தது.
கட்டணத்தினை உயர்த்த வேண்டிய நிலை
இதற்கிடையில் தான் எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வோருக்கு விலையை அதிகரித்துள்ளது. இதுவும் சாமானிய மக்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்து வரும் நிலையில், இனி பேருந்துகளுக்கு தேவையான டீசலை, அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் நஷ்டத்தினை ஈடுகட்ட கட்டணத்தினை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
மால்களுக்கான செலவு
இதே மால்களுக்கு சப்ளை செய்யும்போது, மால்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கும். அது அங்குள்ள கடைகளிலேயே எதிரொலிக்கும். இதனால் கடை வாடகை அல்லது மற்ற கட்டணங்களை அதிகரிக்க தூண்டும். ஏற்கனவே கொரோனாவின் காரணமாக முடங்கியிருந்த மக்கள் தற்போது தான் அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில் விலைவாசி அதிகரிக்க தொடங்கியிருப்பது மேற்கொண்டு கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
செலவு அதிகரிக்கும்
இப்படி ஒவ்வொரு துறையினமும் வழக்கத்தினை விட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இதனால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்து வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்ற மொத்தமாக வாங்கும் பயனர்கள், பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படலாம். இதனால் அவர்களுக்கு நாள்தோறும், உதாரணத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 15 – 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் கொள்முதல் செய்து வருகின்றது. இந்த தொகையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம்.
இழப்பு
சென்னை எரிபொருள் நிலையங்களில் மொத்த கொள்முதலுக்கு 91.59 ரூபாயாக இருந்து டீசல் விலையானது, லிட்டருக்கு 114 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக இந்த இழப்பினை சரி செய்ய கட்டண அதிகரிப்பு செய்வதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேலும் சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை. ஆக இந்த விலை அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். வருடத்திற்கு 1277.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம்.
நேரடியாக வாங்காவிட்டால்?
மொத்த கொள்முதல் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆர்டர் செய்யும் பஸ் ஆப்ரேட்டர்கள், மால்கள் உள்ளிட்ட மொத்த பயனர்கள், பெட்ரோல் பங்குகள் வரிசையில் நின்று சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி வருகின்றனர் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் பாதிக்கப்படக் கூடும். குறிப்பாக நயாரா எனர்ஜி. ஜியோ பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் விற்பனையாளர்களை கடுமையாக பாதிக்கலாம்.
சில்லறை விற்பனை விலையில் மாற்றம்?
இதே பொதுத்துறை நிறுவனங்கள் நவம்பர் 4, 2021ல் இருந்து சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனினும் இன்று சற்று அதிகரித்துள்ள நிலையில் இந்த போக்கு தொடர்ந்தால், ஒட்டுமொத்த விலை போக்கும் மாறலாம். குறிப்பாக போக்குவரத்து கட்டணம், சில்லறை விற்பனை பொருட்கள், உணவு பொருட்கள் என அனைத்துமே விலை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். இதன் காரணமாக பணவீக்கம் மீண்டும் உச்சம் தொடலாம். இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக அரசு ஆரம்பத்திலேயே இதனை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாமானியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
How bulk diesel price hiked impact consumers?
How bulk diesel price hiked impact consumers? /மொத்த டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்.. அச்சத்தில் மக்கள்..!