கொழும்பு:இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், மோதல் ஏற்படுவதை தடுக்க, ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், கச்சா எண்ணெய், வாகனம் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் சுட்டெரிக்கும்வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர்.
மூத்த குடிமக்கள் மூவர் பெட்ரோல் வாங்க ஆறு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்றதால் சுருண்டு விழுந்து இறந்தனர்.நீண்ட வரிசையில் இடையில் புகுந்து பெட்ரோல் வாங்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில், ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அரசு பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வெளிநாடுகளுக்கு, 56 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, பிரதமர் மோடியை சந்தித்து கடனுதவி கோரினார்.அவர் கோரிக்கையை ஏற்று, இரு தவணைகளில், 11 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் இலங்கை அரசு, மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.
Advertisement