நடிகர் மஹத் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகர் மஹத் கடைசியாக ‘மாநாடு’ படத்தில் டிராபிக் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது நாயகனாக ‘ஈமோஜி’ என்ற புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்த வெப் சீரிஸ் திருமணமான தம்பதியர் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் காதல் கதையாக உருவாக்கியுள்ளார்கள்.
சென்னை, தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும் இந்த தொடர் படமாக்கப்பட்டுள்ளது. மஹத் ராகவேந்திரா நாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, மானசா மற்றொரு நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஈமோஜி தொடரை எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், ஆர்.ஹெச் விக்ரம் இசையமைப்பாளராகவும், எம்.ஆர் ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், என். சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
’இருவர் ஒன்றானால்’, மற்றும் ’பொற்காலம்’ படங்களை தயாரித்த ஏ.எம் சம்பத் இந்த ’ஈமோஜி’ வெப் சீரிஸை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக ’தீனா’, ’ரமணா’ படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த ’கஜினி’ படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.