ராஞ்சி :ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவின், 73, உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் டில்லியில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு முன்னாள் முதல்வரான லாலு பிரசாத், கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக, அங்குள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.அவர் மீதான ஐந்தாவது ஊழல் வழக்கில், கடந்த பிப்.,ல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாக, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது. ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு என, அவருக்கு பல உடல்நல பாதிப்பு உள்ளது.இதையடுத்து, அவரை டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அவரை டில்லிக்கு அழைத்துச் செல்ல ஜார்க்கண்ட் சிறைத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
Advertisement