வயிற்றுக்குள் இருந்த தங்கம் எங்கே..? 45 நாட்கள் அறையில் வைத்து அடி, உதை !

அயன் திரைப்பட பாணியில் துபாயிலிருந்து வயிற்றுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டியை கேட்டு, இளைஞர் ஒருவரை 45 நாட்கள் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்திய கும்பல், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பிய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 

கடந்த வாரம் சென்னை பெருங்குடி அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல்நலம் குன்றிய இளைஞர் ஒருவரை அழைத்து வந்த ஒரு கும்பல், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை சேர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த செல்லப்பா என்பதும் துபாயில் இருந்து கடந்த மாதம் நாடு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

துபாயில் வசித்து வரும் அருண்பிரசாத் என்பவர், தங்க கட்டி ஒன்றை செல்லப்பாவிடம் கொடுத்து, அகமதாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தால், அதற்கு கூலியாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் எனக் கூறியுள்ளார். அதன்படி, அயன் படத்தில் வயிற்றுக்குள் போதை பொருளை செலுத்தி நடிகர் நண்டு ஜெகன் கடத்தி வருவது போல், செல்லப்பா தனது உடலுக்குள் செல்லும் வகையில் தங்கத்தை உருக்கி, உட்செலுத்திக் கொண்டு அகமதாபாத் வந்துள்ளார்.

தங்கத்தை வயிற்றுக்குள் இருந்து எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் வரை இயற்கை உபாதைகள் செல்லக்கூடாது என கடத்தல் கும்பல் உத்தரவிட்டிருந்த நிலையில், விமான நிலையம் வந்த செல்லப்பாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தை வெளியில் எடுத்து, தன்னுடன் வந்த சக பணியாளரான கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்பவனிடம் கொடுத்து, பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியதாகவும் ஆனால் தங்கத்தை வாங்கிய அனீஸ், செல்லப்பாவை ஏமாற்றி விட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

தங்கம் இல்லாமல் சென்னை வந்த செல்லப்பாவை கடத்திச் சென்ற அருண்பிரசாத் தலைமையிலான கும்பல், அவர் சொன்னதை நம்பாமல் மண்ணடி, அங்கப்பநாயக்கன் தெரு உட்பட பல இடங்களில் அவரை அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். தங்கத்தை எங்கு மறைத்துவைத்துள்ளாய் எனக் கேட்டு சுமார் 45 நாட்கள் தொடர்ச்சியாக அந்த கும்பல் தாக்கியதில், செல்லப்பாவுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.

இதனால் பயந்துபோன கடத்தல் கும்பல் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டு தப்பியது தெரியவந்தது. செல்லப்பா கொடுத்த வாக்குமூலத்தின் படி மண்ணடியை சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பவனை கைது செய்த போலீசார், அருண்பிரசாத் உட்பட 7 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.