இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். மிக நீண்ட வரிசையில் நின்ற மக்கள் வெயிலின் கோரம் தாங்க முடியாமல் இருவர் உயிரிழந்துபோகும் அளவுக்கு நிலைமை கைமீறிச் சென்றுள்ளது. அத்தியாவசிப் பொருட்களின் விலை மூச்சுமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!
இதன்நடுவில் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை வாங்க முடியாமல் அந்த நாடு தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடும், பல மணி நேரங்கள் மின்வெட்டும் நீடித்து வருகிறது. இலங்கை அரசின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு அந்நாட்டு பொதுமக்கள் வந்துள்ளதால் செய்வதறியாவது திகைத்து வருகின்றனர்.
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து உலக நாடுகளிடம் கடன் வாங்கும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவிடம் முதலில் கடனுதவி கேட்டுள்ளது. தொடர்ந்து பிற சர்வதேச நாடுகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா – இலங்கை இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் இந்தியாவிற்கு சொந்தமாக 6 தீடைகளும், இலங்கைக்கு சொந்தமாக 7 தீடைகளும் உள்ளன.
இந்நிலையில், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 1 ஆண், 2 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 3 குழந்தைககள் என ஆறு பேர் நின்றுகொண்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | மக்கள் வேதனை; 137 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த பேரும் தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறு நபர்களையும் கப்பலில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த குடும்பத்தை இலங்கை அகதிகள் முகாமில் வைப்பார்களா, அல்லது சிறைக்கு கொண்டு செல்வார்களா என்பது குறித்து முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இன்னும் பலர் கூட்டம் கூட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர தயாராக இருப்பதாக வாக்குமூலம் அளித்ததுதான். இதையடுத்து இந்திய கடலோர காவல் படை, கியூ பிரிவு மற்றும் மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.