சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குவாங்சோ நகரை நோக்கி சென்ற போது, மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும், ஆனால், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132 பேர் இருந்த நிலையில், அனைவருமே உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 30ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சில நொடிகளில் 3,225 அடிக்கு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.