புதுடெல்லி: தனது 125வது வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா சாமியாரும் மோடியும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை செய்து கொண்டனர். குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பல்வேறு சாதனையாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். அப்போது காசியை சேர்ந்த யோகா குரு சுவாமி சிவானந்தா (125), தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்கு முன் அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி பார்த்து கைகூப்பி வணங்கினார். பின்னர் திடீரென மோடியின் அருகே சென்று அவரது காலை தொட்டு வணங்க குனிந்தபோது, பிரதமர் மோடியும் அவரது காலை தொட்டு வணங்க முயன்றார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் தங்களது இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர். பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்திய பிறகு, சுவாமி சிவானந்தாவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வணங்கினார். இதைத் தொடர்ந்து அவரை அரவணைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதை பெறுவதற்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் காலை தொட்டு வணங்க சிவானந்தா குனிந்தார். அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது கரங்களால் பிடித்துக் கொண்டார். சுவாமி சிவானந்தா பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் வசித்து வருகிறார். யோகா துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வங்கதேசத்தின் சைலட் மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் கிராமத்தில் பிறந்தார். பின்னர் அவர் வங்கதேசத்தில் இருந்து காசிக்கு வந்தார். பின்னர் தனது குருவான ஓம்காரானந்தரிடம் தீட்சை பெற்று தனது 29வது வயதில் லண்டன் சென்றார். யோகா, பிராணாயாமம் மற்றும் வீட்டு வைத்தியம் ஆகியவற்றின் மூலம் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று சுவாமி சிவானந்தா கூறினார்.