இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், 18 வயது இளம் பெண் நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளமால் உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சிந்து மாகாண அரசு சட்டம் கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், அங்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.50 சதவீதம் பேர் ஹிந்துக்கள் எனவும், அதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 6.51 சதவீதம் பேர் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,சிந்து மாகாணத்தின் சுகூர் பகுதியில் சாலையில் சென்ற பூஜா என்ற 18 வயது இளம்பெண்ணை வாகித் லஷாரி என்பவன், தனது நண்பர்களுடன் இணைந்து கடத்த முயன்றான். ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், பூஜாவை சுட்டு கொன்றான். வாகித்தை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னரும், பூஜாவை கடத்தும் முயற்சியில் வாகித் ஈடுபட்டதும், அது தோல்வியில் முடிந்ததும் தெரியவந்துள்ளது. 2வது முறை கடத்தல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவன் கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement