புதுச்சேரி: 40 ஆண்டு கால பிரெஞ்சு கற்பித்தல் பணியிலுள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பிரெஞ்சு துறை பேராசிரியர் நளினி ஜே தம்பிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழக பிரெஞ்சு துறை பேராசிரியர் நளினி ஜே தம்பி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு மொழி மற்றும் கலாசாரத்தை கற்பித்தல் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தின் உயரிய விருதான செவாலியே விருது பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான பிரெஞ்சு தூதர் லீஸ் தல்போ பரே இவ்விருதை வழங்கியுள்ளார். இதுபற்றி பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு தூதரகத் தரப்பில் கூறுகையில், “பிரெஞ்சு மொழிக்கும், பிரான்ஸ் மற்றும் இந்திய அளவில் கல்வித்துறை ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் பெண்கள் உரிமைக்கான பணிகள் ஆகியவற்றில் சிறப்பாக பிரெஞ்சு துறை பேராசிரியர் நளினி ஜே தம்பி தடம் பதித்துள்ளார்.
முனைவர் பட்டத்தை பிரெஞ்சில் பெற்றுள்ளார். இந்திய – பிரான்ஸ் இருநாட்டு மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ் புதுச்சேரியிலிருந்து பிரான்ஸுக்கு பத்து மாணவர்களையும், பாரீஸ் பல்கலைக்கழகத்திலிருந்து புதுச்சேரிக்கு ஆறு பேரும் இவரது முயற்சியால் வந்துள்ளனர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக பிரெஞ்சு மொழியைக் கற்றுத் தருவதில் சிறந்து விளங்கியுள்ளார். அத்துடன் கடந்த 2009-ல் பிரெஞ்சு-இந்தி டிக்ஷனரியையும் சதாசிவன் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். அத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல் பெண் டீன் என்ற பெருமையும் உண்டு” என்று குறிப்பிடுகின்றனர்.
பிரான்ஸ் அரசின் உயரிய விருதினை கலை, கல்வி என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு வழங்குவது வழக்கம். ஏற்கெனவே செவாலியே விருதினை இந்திய அளவில் கலைத்துறையில் புகழ் பெற்ற இயக்குநர் சத்யஜித் ரே, நடிகர்கள் சிவாஜி கணேசன், கமலஹாசன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ், ஷாருக்கான் மற்றும் பலரும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.