அதானி தொழிலில் கால் பதித்துள்ள அம்பானி!| Dinamalar

மும்பை: புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல்களான சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, சோலார் பேனல்கள் துறைகளில் உள்ள அதானி நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ள கச்சா எண்ணெய் தொழிலில் இறங்கும் யோசனையில் உள்ளது. அதே போல் அம்பானி நிறுவனம் சோலார் பேனல்கள், பேட்டரி உற்பத்திக்கான ஆலையை அமைக்க உள்ளது.

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை அடைய முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் கடும் போட்டியில் இருக்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளது. அதானி குழுமம் மின் விநியோகம், விமான நிலையம், துறைமுகங்கள் இயக்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, சுரங்கம், சமையல் எண்ணெய் ஆகிய தொழிலில் கொடிகட்டி பறக்கிறது. தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியிலும், அதானி குழுமம் கச்சா எண்ணெய் தொழிலிலும் இறங்க உள்ளதால் நேரடி தொழில் போட்டி உருவாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அராம்கோவின் பங்குகளை வாங்கும் யோசனை குறித்து அதானி குழுமம் விவாதித்துள்ளது. அந்நாட்டின் பொது முதலீட்டு நிதித் திட்டம் மூலமாக அதானி பங்குகளை வாங்க இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது எண்ணெய் அலகின் 20 சதவீதத்தை அராம்கோவிற்கு விற்று அதற்கு பதிலாக அராம்கோவின் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை பெற திட்டமிட்டிருந்தது. 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்த அத்திட்டம் சமீபத்தில் கைவிடப்பட்ட நிலையில், அதானி குழுமம் அராம்கோ பங்குகளில் முதலீடு செய்யும் யோசனையில் உள்ளது.

அதானி சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பெட்ரோகெமிக்கல் துறையில் நுழைய விரும்பினார். குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு அருகில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜெர்மனியின் பி.ஏ.எஸ்.எப்., ஆஸ்திரியாவின் போரியலிஸ் ஏ.ஜி., ஆகிய ரசாயண நிறுவனங்கள் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அக்ரிலிக் வளாகத்தை அமைக்க இருந்தார். கோவிட் பிரச்னை அத்திட்டத்தில் தடங்கலை ஏற்படுத்தியது. இருப்பினும் கடந்த ஆண்டு அதானி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018ல் சவுதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவை சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க இருந்தன. ஆனால் மஹாராஷ்டிராவின் ரத்னகிரியில் இத்திட்டத்திற்கான இடத்தை கையகப்படுத்துவதில் எதிர்ப்பு எழுந்ததால் திட்டம் கிடப்பில் உள்ளது. அத்திட்டத்தில் தங்கள் நிறுவனத்தையும் இணைத்துக்கொள்ள அதானி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அப்படி இணைந்தால் அது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நேரடி போட்டியாக அமையும்.

அதே போல் அதானி நிறுவனம் கோலோச்சும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மின்சக்தி, காற்றாலை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்னாற்றல் திட்டங்களில் அம்பானியும் இறங்கியுள்ளார். சோலார் பேனல்கள், பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய குஜராத்தின் ஜாம் நகரில் நான்கு பிரம்மாண்ட ஆலைகள் நிறுவும் திட்டத்தை கடந்த ஆண்டு ஜூனில் அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் இருபெரும் நிறுவனங்களும் நேரடியான கடும் போட்டிக்கு தயாராகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.