“டெல்லி நகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அரசியலில் இருந்தே ஆம் ஆத்மி விலகிவிடும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தெற்கு, வடக்கு, மேற்கு என மூன்று நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளுக்கான தேர்தலை மத்திய அரசு தொடர்ந்து ஒத்தி வைத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேற்குறிப்பிட்ட மூன்று நகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லி நகராட்சித் தேர்தலை தவிர்ப்பதற்காகவே பாஜக இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக தன்னை உலகிலேயே மிகப்பெரிய கட்சி எனக் கூறி வருகிறது. அவ்வளவு பெரிய கட்சி, எங்களை போன்ற ஒரு சிறிய அரசியல் கட்சியையும், சாதாரண உள்ளாட்சித் தேர்தலையும் கண்டு பயப்படலாமா? டெல்லி நகராட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த மத்திய பாஜக அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா? அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பாஜக வெற்றி பெற்று விட்டால் ஆம் ஆத்மி அரசியலில் இருந்தே விலக தயாராக இருக்கிறது” என ஜெஜ்ரிவால் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM