திருச்சி:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த
தே.மு.தி.க.
பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு
தே.மு.தி.க.
நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வு சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும். தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை. கொரோனா கால கட்டத்தில் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய வறுமையான சூழலில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு நிச்சயம் மக்களை பாதிக்கும்.
இதனை கண்டித்து நேற்று கேப்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை உடனடியாக திரும்பப்பெற்று மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசின் சுமையை மக்களின் மீது திணிக்கின்றனர். அரசு மக்களுக்காகத்தான் உள்ளது. சுமையை மக்களின் மீது சுமத்தாமல் அரசு நடந்து கொள்ள வேண்டும்.
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி இன்று ஆட்சி அமைக்கவில்லையா? 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி இன்று ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றது. அரசியலில் இது சகஜம் தான், எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம்.
தாலிக்கு தங்கம், இலவச திருமண உதவி திட்டம் என்று பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு வந்ததினால் நிறுத்தக்கூடாது. அவர்கள் பெயரில் திட்டங்கள் இருப்பது இந்த அரசுக்கு கஷ்டமாக இருந்தால் எப்படி அம்மா உணவகத்தை கலைஞர் உணவகம் என மாற்றினார்களோ, அதுபோல் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
மக்களுக்கான ஒரு நல்ல திட்டம், மக்களை போய் சேர வேண்டிய திட்டத்தை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக மாற்றுவதோ, நிறுத்துவதோ சரியில்லை. பெண்கள் வரவேற்கும், பெண்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் இந்த அரசு தி.மு.க. பெயரிலாவது தொடர்ந்து நடத்த வேண்டும்.