டெல்லியில் மாநகராட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) அரசியலை விட்டு வெளியேறுகிறோம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2011 ஆண் ஆண்டு, டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை, நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று, டெல்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
டெல்லி மாநகராட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) அரசியலை விட்டு வெளியேறுகிறோம். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக கூறிக் கொள்கிறது. ஆனால் ஒரு சிறிய கட்சி மற்றும் ஒரு சிறிய தேர்தலை பார்த்து பயந்து விட்டது.
டெல்லி மாநகராட்சி தேர்தலை பாஜக தள்ளி வைப்பது, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தியாகம் செய்த தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். தோல்வி பயத்தில், இன்று டெல்லி மாநகராட்சி தேர்தலை தள்ளி வைக்கின்றனர். நாளை மாநிலங்கள் மற்றும் நாட்டின் தேர்தல்களை ஒத்தி வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.