அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 537 அறிவிப்புகள் நிறைவேறாமல் இன்னும் நிலுவையில் உள்ளன- மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

2011-2012 முதல் 2020-2021 வரை கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் கடந்த ஆட்சியாளர்களால், வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன.

செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள 537 அறிவிப்புகளில் 5,470 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான 26 அறிவிப்புகள், அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எவற்றையும் ஆராயாமல், ஆய்வு மேற் கொள்ளாமல், 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்த இயலாதவை என கைவிடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான, அதாவது 19 அறிவிப்புகள் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உள்ள ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

மேற்கூறிய 537 அறிவிப்புகளில், 9,741 கோடி ரூபாய் திட்டமதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு, கடந்த ஆட்சிக்காலத்தில் அதற்குரிய அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

537 அறிவிப்புகளில் 491 அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை மற்றும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 76,619 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 143 அறிவிப்புகளுக்கு அதற்குரிய அரசாணை மற்றும் அனுமதி வழங்கப்பட்டு, நிதி எதுவும் விடுவிக்கப்படாமலும், பணிகள் துவங்கப்படாமலும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

2,160 கோடி ரூபாய்ச் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைகோள் நகரம்.

மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586.86 ஏக்கரில் ஒருங்கிணைந்த துணைகோள் நகரம்.

ரே‌ஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், பொது இடங்களில் இலவச வைபை, ரே‌ஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோஆப்டெக்சில் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க ரூ.500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்,

அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்படும், அம்மா வங்கி அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்று 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் 1 லிட்டர் ரூ.25க்கு என குறைந்த விலையில் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல மீனம்பாக்கம் செங்கல்பட்டு இடையே உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கிறது.

கடந்த ஆட்சியாளர்களால் 2011-ம் ஆண்டு அவர்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிறைவேறாமல் இருப்பவைகளை தங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரச் சாலைத் திட்டம்.

தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்‘

ஆன்லைன் டிரேடிங் தடுக்கப்படும்.

மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.

தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்புத் திட்டம்.

இலவச டிடிஹெச் சேவைகள் விரைவாக வழங்கப்படும்.

வீடுகளில் திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க இளைஞர் சிறப்புப் படைகள்.

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் படை.

மீனவர் பாதுகாப்புப் படை.

சிங்கப்பூரில் உள்ளதுபோல சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதை ஒப்பிடும்போது, 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு தனது 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 186 வாக்குறுதிகளும், 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 321 வாக்குறுதிகளும் என மொத்தம் 507 வாக்குறுதிகளை அளித்தது. அ.தி.மு.க. ஆட்சி 10 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தும், இந்த 507 வாக்குறுதிகளில், 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டு நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, இந்த அரசின் முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, (மேசையைத் தட்டும் ஒலி) அவற்றில் 171 வாக்குறுதிகளுக்கு அரசாணைகளும் வழங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை உறுப்பினர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

கடந்த ஆட்சியாளர்களால் சட்டப்பேரவை விதி எண்.110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட அனைத்து நிதி ஒதுக்கீடு தேவைப்படும் அறிவிப்புகளுக்கும், தொடர்புடைய துறைகளின் மானியக் கோரிக்கைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை இந்த மாமன்றத் தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த அறிவிப்புகள் அனைத்துமே இன்னமும் வெற்று அறிவிப்புகளாக காகிதத்திலேயே உள்ளன. மேலும், அவை விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்பது தான் நிதர்சனம். (மேசையைத் தட்டும் ஒலி)

நான் தொடர்ந்து ஒன்றை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். இந்த அவையிலும் பல முறை நான் பதிவு செய்திருக்கிறேன். இது எனது அரசு அல்ல. நமது அரசு. (மேசையைத் தட்டும் ஒலி) அந்தக் கருத்தினைப் பின்பற்றி இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட நான் விரும்புகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வேளையில் “பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன” என்று கேட்பது போல் இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, “இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும்”. (மேசையைத் தட்டும் ஒலி)

நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

மேலும், ஒன்றை இந்த அவையில் மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்து காட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன், எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கேற்ப, (மேசையைத் தட்டும் ஒலி) மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளித்து நன்றி கூறி அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்… முதலமைச்சரான பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் நாளை துபாய் செல்கிறார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.