ஆண்டுக்கு ₹5,000 கோடி; மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கொள்ளை; அம்பலமாகும் அரசு மற்றும் தனியார் கூட்டுச்சதி!

“ம்… பிரமாதம். சூப்பர்!”

“ம்ஹூம்… தேறாது. சுத்த வேஸ்ட்!”

கடந்த 18/03/22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து இப்படிப்பட்ட பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம் கவலையெல்லாம்… பட்ஜெட் என்பது உண்மையிலேயே உருப்படியாகத்தான் போடப்படுகிறதா… அதன் மூலமாக மக்களுக்கு முழுமையாக பலன்கள் கிடைக்கின்றனவா என்பதைப் பற்றித்தான்.

சாம்பிளாக, மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கையில் எடுப்போம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1,547 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இந்த மருத்துவக் காப்பீட்டுக்காக கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, பாதிக்குப் பாதி இன்ஷூரன்ஸ் நிறுவனக்களுக்கு வருமானமாகப் போயிருப்பதை நினைக்கும்போதுதான், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் 1,547 கோடி பற்றியும் கவலை பொங்குகிறது!

ஆயிரமாயிரம் கொள்ளைகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவற்றில் ஒன்றாக இணைந்து, கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை அடைந்துவருகிறது இந்த `மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கொள்ளை!’

பட்ஜெட்

ஏழை, நடுத்தர மக்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காக அரசியல்கட்சிகள் பயன்படுத்தும் கவர்ச்சி ஆயுதங்களில் ஒன்றாகவும் இந்த மெடிக்கல் இன்ஷூரன்ஸ் (மருத்துவக் காப்பீடு!) இருப்பதால், ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள், ஆயிரமாயிரம் கோடிகளை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால், மக்களுக்குப் பலன் சேர்வதைவிட, தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும்தான் கோடி கோடியாகக் கொழிக்கின்றன. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட்டணி போடுவதால், இந்த `மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கொள்ளை’ ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே இருக்கிறது!

அவசர மற்றும் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளின் கட்டணம் தாறுமாறாக இருப்பதால், பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இத்தகைய சூழலில்தான் அரசாங்கங்களே பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை 15 ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரத் தொடங்கின. மத்திய அரசு ஒரு காப்பீடு கொடுத்தால், மாநில அரசும் ஒரு காப்பீடு கொடுக்கிறது. ஆனால், இதன் பலன் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை என்கிற அதிர்ச்சிகர உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமீபத்தில் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள்.

அதிர வைக்கும் ஆர்டிஐ!

நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு விவரங்கள்

மதுரையைச் சேர்ந்த `தி பேஃக்ட்’ எனும் தன்னார்வு அமைப்பின் களஆய்வாளர் வெரோணிக்கா மேரி, அதைப் பற்றி விரிவாகவே பேசினார்.

“தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக கடந்த ஆண்டுகளில் (2021 வரை), ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயன்பாடுகள் குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப்பெற்றுள்ளோம். அந்த தகவல்களைப் பார்க்கும்போது அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்ட சூழலில், பெரும்தொகை, மக்களின் மருத்துவத் தேவைக்குப் பெரிதும் பயன்படாமல், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது. கடந்த 2009-10 நிதியாண்டு முதல் 2020-22 (அக்டோபர் 2021 வரை) நிதியாண்டுகள் வரையிலான 13 ஆண்டுகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு செலுத்திய தொகை ரூ.10,706 கோடி. அதில் தனியார் மருத்துவமனைகள் ரூ.5,736 கோடி, அரசு மருத்துவமனைகள் ரூ.2,602 கோடி என்று மொத்தமே சுமார் 8338 கோடி ரூபாய் மட்டுமே மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதம் ரூ.2368 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது.

ஒ.பி.எஸ் – ஈ.பி.எஸ்; ஒருங்கிணைந்த ₹2000 கோடி!

13 ஆண்டுகள் எனும்போது, 2009-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுக்கவேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வர்களாக இருந்த காலகட்டம் இது. இதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் (2008-2016) வரை, அதாவது 8 ஆண்டுகளுக்கு சுமார் 368 கோடி ரூபாய் மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமாக சென்றுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான நான்கு ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் (ஒ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் காலத்தில்) 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சுளையாக இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்தால் பிரிமியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் சுமார் ரூ.5,315 கோடி. இதில் சுமார் 3,300 கோடிகள் மட்டுமே மக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் சுமார் 2,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமாகச் சென்று சேர்ந்துள்ளது.

Edappadi Palanisamy

ஜெயலலிதா முதல்வராக இருந்த 2016-17 நிதியாண்டில் ரூ.928 கோடி வரை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. இதில், 850 கோடி ரூபாய் மக்களின் மருத்துவத் தேவைக்காகப் பயன்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9% தொகை மட்டுமே இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு வருமானமாக சென்றுள்ளது. ஜெயலலிதா இறந்தபின், 2017-18 காலகட்டத்தில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒரேடியாக 1,773 கோடி ரூபாய் வரை பீரிமியமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 845 கோடி ரூபாய் அதிகம். இதில், சுமார் 900 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், முந்தைய ஆண்டில் இருந்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலிருந்து அதிகபட்சமாக 10% வரை மட்டும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்பது மருத்துவத்துறையைச் சேர்ந்வர்களின் கணிப்பு. அப்படியிருக்க, ஒரேடியாக ரூ.800 கோடிகள் வரை அதிகப்படுத்தி, அதாவது 90% அளவுக்கு கூடுதல் தொகை பிரிமியமாக தனியார் நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது” என்று கொந்தளிக்கும் வெரோணிக்கா மேரி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் பேசி தகவல்களைத் திரட்டியுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட மோசடி!

தொடர்ந்து பேசிய வெரோணிக்கா மேரி, “துறை சார்ந்த பலரிடமும் நாங்கள் பேசினோம். அதனடிப்படையில் பார்க்கும்போது, இது திட்டமிட்ட கொள்ளை. ஆம், கோடி கோடியாக வாரி இறைக்கும் இடத்திலிருக்கும் அரசு எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் போகிற போக்கில் பல ஆயிரம் கோடிகளை, ஒரு சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொழிப்பதற்காக மட்டுமே வாரி வழங்கியிக்கும்போது, இதை கொள்ளை என்றுதான் சொல்லவேண்டும்.

`அரசு காப்பீட்டுத் திட்டங்களுக்கு நிதியை அதிகப்படுத்தி ஒதுக்குங்கள்’ என்று முக்கிய மேல்மட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பேரம் பேசி மேற்கொண்ட மோசடியாகவே இது தோன்றுகிறது. சுகாதாரத் துறையின் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கும் இதில் பங்கு இல்லாமல் இருக்காது. இது சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அனைவரும் இந்த மோசடிக்கு துணைபோகிறார்கள். தணிக்கை செய்ய வேண்டிய அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருப்பது இன்னும் கொடுமை. முறையாக நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு, இதை முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால், பலர் முகத்திரை கிழியும், எதிர்வரும் காலங்களில் மக்கள் வரியாகச் செலுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் அல்லது ஏழை மக்களுக்கு சென்றடையும்” என்று குமுறலுடன் சொன்னவர், அடுத்து பகிர்ந்தது கூடுதல் அதிர்ச்சி!

ஆண்டுவரியாக ஒதுக்கப்பட்ட தொகை

தனியார் மருத்துவமனைகள் காட்டில் பணமழை!

“பொதுவாகவே தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாகத்தான் வசூலிப்பார்கள். அதிலும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் தொகை என்றால்… கேட்கவே வேண்டாம். இஷ்டம்போல கணக்கெழுதி பில்லைத் தீட்டிவிடுவார்கள். அந்த வகையில், 2009-2022 வரையிலான 13 ஆண்டு காலத்தில் மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு இன்ஷூரன்ஸ் தொகையாக ரூ.5,736 சென்றிருக்கிறது. பொதுமக்களுக்கு உண்மையிலேயே சிகிச்சை வழங்கியதற்காக பயன்படுத்தியது போக, கிட்டத்தட்ட 3,000 கோடிகளுக்கு மேல் லாபமாகவே சென்றிருக்கும். இந்த நிதியைக் கொண்டே எய்ம்ஸ் தரத்தில் இரண்டு மருத்துவமனைகளை தமிழக அரசே நிறுவியிருக்கலாம் அல்லது மல்ட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி தரத்தில் மாவட்டத்துக்கு ஒன்று என்று அதிநவீன மருத்துவமனைகளை அரசே நிறுவியிருக்க முடியும். பல்லாயிரம் பேருக்கு அரசு வேலையை உறுதிப்படுத்தியும் இருக்கமுடியும். அவை அரசின் நிரந்தர சொத்தாகவும் மாறியிருக்கும். ஆக, நேரடியாக தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் சென்ற ரூ.2,368 கோடி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு லாபமாகச் சென்ற 3,000 கோடி என 5000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளை போயிருக்கிறது” என்று விரக்தியுடன் சொன்னார் வெரோணிக்கா மேரி.

அரசு மருத்துவமனைகளுக்கு 4 கோடி; தனியார் மருத்துவ மனைகளுக்கு 390 கோடி!

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் ப.சாமிநாதனிடம் (டி.சி.ஹெச்) இதுகுறித்துக் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த 2009-10-ல் கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஆரம்பமானது. முதலாம் ஆண்டு ரூ.443 கோடி பிரீமியம் நிதியை ஸ்டார் ஹெல்த் இன்ஷுரன்ஸ் தனியார் கம்பெனிக்கு வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ஒரு பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விதிமுறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

Karunanidhi

முதலாம் ஆண்டில் அரசு மருத்துவமனைகள், வெறும் 4 கோடி ரூபாய் அளவிலான தொகையை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்டன. அதேசமயம், தனியார் மருத்துவமனைகள் 390 கோடி ரூபாய்க்கு மேல் பயன்படுத்தியிருந்தன. இதையடுத்து, அரசாங்கக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்ளும் அரசு மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் குழுவினருக்கு 15% ஊக்கத்தொகையும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நேரடி நிதியாக 25% தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அரசாணை வெளியிட்டது. வருமானம் கிடைக்கிறது என்பதற்காக அரசு மருத்துவர்களும் காப்பீட்டுத் திட்ட நிதியைப் பயன்படுத்தி சிகிச்சைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக, முந்தைய ஆண்டில் வெறும் ரூ.9 கோடியாக இருந்த அரசு மருத்துவமனைகளின் காப்பீட்டு நிதிப்பயன்பாடு, ஒரேயடியாக ரூ.174 கோடியாக உயர்ந்தது. இதன்பிறகு அரசு மருத்துவமனைகள் தங்கள் மேம்பாட்டுக்கு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம், ஒவ்வோர் ஆண்டும் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக அரசாங்கம் வழங்கிவந்த நிதியானது படிப்படியாகக் குறைக்கப்பட்டதுதான்.

`மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊக்கத்தொகையும், வளர்ச்சி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் வருமானத்தைப் பெருக்கிச் செலவைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கைவிரித்துவிட்டது சுகாதாரத் துறை. இதனால் இலவச சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய அரசு மருத்துவமனைகளில், `அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் மருத்துவக் காப்பீட்டு அட்டை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்வோம்’ என்று நோயாளிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள். இதனால் பல நாள்கள் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நோயாளிகளைக் கடத்தும் தனியார் மருத்துவமனைகள்!

Hospital (Representational Image)

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவக் காப்பீட்டு நிதியைத் தனியார் மருத்துவமனைகள் மிகவும் லாகவமாக பயன்படுத்த ஆரம்பித்தன. காப்பீட்டு அட்டையுடன் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, தனியார் மருத்துவமனைக்கு கடத்தும் படலமும் அதிகரித்தது. இதே சிகிச்சை, கூடுதல் கட்டணம் எல்லாம் கிடையாது என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அங்கே அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுவிட்டு, பெட், மருந்து மாத்திரை, கூடுதல் செலவு சென்று 50,000 முதல் 1 லட்சம் வரை கறப்பது வழக்கமான நிகழ்வாக இருந்தது. தனியார் மருத்துவமனைகளின் இதுபோன்ற மோசடிகளால் அரசு மருத்துவக் காப்பீட்டு நிதி, பெருமளவு தனியாருக்குச் சென்றது.

அரசு காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை, அதன் பலன் மக்களைவிடத் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும்தான் போய்ச் சேர்கிறது. சிறு பகுதிதான் மக்களுக்குப் பயன்படுகிறது’’ என்று வருத்தத்துடன் சொன்ன சாமிநாதன், தொடர்ந்தார்.

என்ன செய்யப் போகிறார் `உங்களில் ஒருவன்’?

“பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்துவைத்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், `ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு மருத்துவமனைகள் இருக்கும்போது, எதற்காக மருத்துவக்கல்லூரிகளுக்கு அனைத்திந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு? அதை நீக்கிவிடலாம்’ என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

இவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கிற முதல்வர், “அரசாங்க மருத்துவமனைகள் இருக்க, எதற்காக தனியார் மருத்துவமனைகளுக்குக் காப்பீட்டு நிதி சென்று சேரவேண்டும்?” என்றும் யோசித்தால், தமிழக மக்களுக்கும் தமிழக அரசின் கஜானாவுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மருத்துவர்களின் எண்ணிக்கையும் இங்கேதான் அதிகம். பல மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. தமிழகத்தில் 20,000 -க்கும் மேலான அரசு மருத்துவர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் அரசு காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதைவிட, அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள், நவீன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தினால் அனைத்துவிதமான மருத்துவ சிகிச்சைகளையும் மக்களுக்கு இலவசமாகவே வழங்கலாம்.

MK Stalin

தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம், உபகரணங்களும் உட்கட்டமைப்பும்தான். மற்றபடி அனுபவமுள்ள மருத்துவர்கள், சிகிச்சை முறைகள் எல்லாம் ஒன்றுதான். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் லாபம் கொழிக்க, மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணரவேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார் சாமிநாதன் வேண்டுகோளாக.

`மக்களின் ஆரோக்கியத்துக்காக…’ என்கிற பெயரில் நடக்கும் இன்ஷூரன்ஸ் கொள்ளைக்கு, நம்மில் ஒருவன், அதாவது `உங்களில் ஒருவன்’ முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.