இந்த நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஏற்கெனவே நடந்து முடிந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில் கேள்வி நேரங்களில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறைச் சார்ந்த அமைச்சர்கள் அல்லது இணை அமைச்சர்கள் பதில் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய கேள்வி நேரத்தில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்தார். லக்கிம்பூர் கார் விபத்து விவகாரத்தில் அஜய் குமார் மிஸ்ரா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அதனால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஒத்திவைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. இந்த நிலையில், நீண்ட நாளுக்குப் பிறகு அஜய் குமார் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை.
அஜய் மிஸ்ரா அளித்த பதில் இதோ…
எவ்வளவு கைதிகள்!
தற்போது இந்தியச் சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த 3,467 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக 1,630 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள். 615 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 463 பேர், மியான்மாரைச் சேர்ந்த 152 பேர், நைஜீரியாவைத் தவிர ஆப்பிரிக்காவிலிருந்து 114 பேர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து 107 பேர். இவர்களோடு, கனடா மற்றும் சீனாவிலிருந்து தலா 14 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 4,926 வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர். இவர்களில் 1,140 பேருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. மேலும், 3,467 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர்.
இந்த கைதிகளில் மேற்கு வங்கத்தில் 1,295 பேரும், டெல்லியில் 400 பேரும், மகாராஷ்டிராவில் 380 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 290 பேரும், கர்நாடகாவில் 155 பேரும், அதோடு இமாச்சலப்பிரதேசத்தில் 119 பேரும் சிறையில் உள்ளனர். 2020-21-ம் நிதியாண்டில் உணவுக்காக 1,000 கோடி ரூபாய் உட்பட வெளிநாட்டு வம்சாவளி கைதிகளுக்காக மொத்தம் 2,018.48 கோடி ரூபாய் அரசு செலவு செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலான கைதிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாஸ்போர்ட், விசா விதிமீறல் தொடர்பான வழக்குகளில் சிறையில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.