கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுவதால் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் பெட்ரோல், டீசலை வாங்கும் அவல நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இக்குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்தியா தந்த பணத்தை கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில் 14 ஆயிரம் கிராமங்களில் கடைகள் அமைத்து வருவதாக ஆளுங்கட்சி மீது சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். உணவகங்களிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகையில்தான் அப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.