டெல்லி : 30 லட்சம் கோடி ரூபாய் (400 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ஏற்றுமதி இலக்கை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இந்தியா எட்டிவிட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ள அவர், சுயசார்பு இந்தியா என்ற இலக்குடன் கூடிய இந்தியாவின் சாதனை பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை ஒரு மைல்கல் என்று பாராட்டியுள்ளார். இந்த வெற்றிக்கு உதவி புரிந்த விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாக மோடி கூறியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 9 நாட்களுக்கு முன்னதாகவே இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியதை குறிக்கும் புள்ளி விவரங்களையும் மோடி பதிவிட்டுள்ளார். அதில், ‘சராசரியாக, ஒவ்வொரு மணி நேரமும் 46 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்கள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதோடு 33 பில்லியன்களும் டாலர் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2020-21 நிதியாண்டில் ஏற்றுமதி 292 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2021-22 இல் ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரித்து 400 பில்லியன் டாலர்களாக உள்ளது.