அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 30 நாடுகள் ஒன்றிணைந்துள்ள கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது என்று கூறி உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் கடந்த 24-ம் தேதி ரஷ்யப் படையினரால் உக்ரைனில் தொடங்கப்பட்ட இந்த போர் நான்கு வாரங்களாக நடைபெற்றுவருகிறது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தபோதும் ரஷ்யா போரை நிறுத்தியபாடில்லை. மேலும், சர்வதேச நீதிமன்றமும்கூட, உக்ரைனில் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிட்டும், ரஷ்யா அதை மறுத்துவருகிறது. இதற்கிடையில், `உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் ரஷ்ய ஆயுதப்படைகள் ஈடுபட்டன’ என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ரஷ்யா மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பென்டகனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்விதமாக, அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனடோலி அன்டோனோவ் டெலிகிராம் சேனலில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “யூகோஸ்லாவியா, இராக், லிபியா ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் அவர்களின் நேட்டோ நட்பு நாடுகளின் விமானங்கள் சமீபத்தில் எப்படி குண்டுவீசின என்பதை பென்டகன் ஏற்கெனவே மறந்துவிட்டது. மேலும், ஆப்கானிஸ்தான், சிரியாவில் அமெரிக்க ராணுவ வீரர்களும் கூலிப்படையினரும் செய்த கொடூரமான குற்றங்கள், வாஷிங்டனுக்கு நினைவில் இல்லை” என அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், “ரஷ்ய ஆயுதப் படைகளின் தாக்குதல்கள் உக்ரேனிய ராணுவ உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே குறிவைக்கின்றன” என்றும் அனடோலி அன்டோனோவ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.