இலங்கையில் கொரிய முதலீடுகள்: முதலீட்டு சபை தலைவர் கொரிய தூதுவருடன் கலந்துரையாடல்

கொரிய தூதர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் (Santhush Woonjin Jeong) , இலங்கை முதலீட்டு சபை தலைவரான ராஜா எதிரிசூரியவை சந்தித்தார்.

முதலீட்டுச் சபை வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ,எதிரிசூரிய இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், கொரிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொரியாவிலிருந்து அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தற்போதுள்ள கொரிய முதலீட்டாளர்களின் முயற்சிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது தொடர்பாகவும், கலந்துரையாடலின் போது முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

கொரியா நிறுவனங்கள் ,இலத்திரனியல் மற்றும் கணினி துறையில் உலக அளவில் பிரபல்யமானது. ஹம்பாந்தோட்டையில் அமைய உள்ள மருந்து தொழிற்சாலைகள் மற்றும் இலத்திரனியல் உற்பத்திகளில் அதிகளவான கவனம் செலுத்தி கொரிய நிறுவனங்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு இலங்கை முதலீட்டு சபை தலைவர், தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

துறைமுக நகரம் மற்றும் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நீர் வழங்கல் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிகமான கொரிய நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பாக, கொரிய நிறுவனங்கள் இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றன என்றும் தூதுவர் கூறினார்.

கொரிய தொழில் முயற்சியாளர்கள் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக இலங்கையில் விசேட முதலீட்டு வலயத்தை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை தூதுவர் பாராட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.