கீவ்: உக்ரைனின் மேரிபோல் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 27-வது நாளாக போர் நீடித்தது. தலைநகர் கீவ், கார்கிவ், மேரிபோல் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியது. மேரிபோல் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவு, குடிநீர் இன்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் போரால் ஐரோப்பா முழுவதும் அகதிகள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. உக்ரைனில் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 80 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ரஷ்ய ராணுவம் தரப்பில் 9,861 வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 16,153 பேர் காயமடைந்திருப்ப தாகவும் ரஷ்ய ஆதரவு இணைய ஊடகத்தில் நேற்று முன்தினம் இரவு செய்தி வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது.
உக்ரைன் அதிபர் ஜெலன்கி நேற்று இத்தாலி நாடாளுமன்றத் தில் காணொலி வாயிலாக பேசினார். அவர் கூறும்போது, ‘‘உக்ரைனை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதுவரை 117 குழந்தைகள் கொலை செய் யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கடத்தப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். பல்வேறு நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய போரால் பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.