கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.
இந்த சண்டையில் ரஷிய ராணுவம் தரப்பில் இதுவரை 7000 முதல் 15 ஆயிரம் வரையிலான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இதற்கிடையே அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.