கீவ் :
உக்ரைனைச் சேர்ந்தவர், போரிஸ் ரோமன்சென்கோ (வயது 96). இவர் இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பியவர் ஆவார்.
ஆனால், கடந்த 18-ந் தேதியன்று ரஷிய அதிபர் புதினின் படைகள் கார்கிவ் நகரில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள அவரது பேத்தி யூலியா கூறும்போது, ‘கடந்த 18-ந் தேதியன்று, கார்கிவ் நகரில் சால்டிவ்கா குடியிருப்பு பகுதியில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக அறிந்தேன். என் தாத்தா பற்றி ஏதாவது தெரியுமா என்று உள்ளூர்வாசிகளிடம் கேட்டேன். அவர்கள் தாத்தாவின் எரியும் வீட்டை படம் எடுத்து அனுப்பினர். ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இதைப்பற்றி நான் அறிந்தேன். எனவே என்னால் அங்கு உடனடியாக செல்லமுடியவில்லை” என குறிப்பிட்டார்.
ரஷிய தாக்குதலில் போரிஸ் ரோமன்சென்கோ பலியானது குறித்து உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “போரிஸ் ரோமன்சென்கோவின் பலி, சொல்ல முடியாத குற்றம். ஹிட்லரிடம் உயிர்பிழைத்தவர், புதினால் கொல்லப்பட்டுள்ளார் ” என குறிப்பிட்டுள்ளார்.