ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஏற்கனவே இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு ஆளில்லா விமானம் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் புயல் காலங்களில் கடலில் சிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது, வெளிநாட்டுக் கப்பல்கள் எல்லை தாண்டுவதை கண்காணிப்பது, கடலில் காணாமல் போன மீனவர்களை தேடி மீட்பது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இரவிலும் கடலில் ரோந்து சென்று, கண்காணிக்கும் வகையிலான நவீன வசதிகளை கொண்ட, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு மேம்பட்ட இலகுவான ALH-Mk 13ரக ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திற்கு, இந்திய கடற்படை சார்பில் அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த இரண்டு இலகுரக புதிய அதிநவீன ஹெலிகாப்டர்களை ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்துடன் இணைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் புதிதாக இணைக்கப்பட்ட புதிய அதிநவீன ஹெலிகாப்டர்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்றனர்.
கிழக்கு கடற்படை பிராந்திய தலைவர் தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
புதிய ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சம் குறித்து கிழக்கு கடற்படை பிராந்திய தலைவர் தளபதி பிஸ்வஜித் தாஸ் குப்தா பேசும்போது, “இந்த ALH MK 13 ரக ஹெலிகாப்டர் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும். மேலும் கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்களுக்கு இரவும், பகலும் பயன்படுத்த உதவும்.
ஹெலிகாப்டர்கள் முழுக்க முழுக்க உள்நாட்டில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவை கடற்படை கப்பல்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்தும் இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் ஏந்திய ரோந்துப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் அதிநவீன கடல்சார் ரோந்து ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் பேலோட் பொருத்தப்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் வரை எளிதில் கண்காணிக்கப்படும் வகையிலும், ஒரே நேரத்தில் 14 பேரை மீட்கும் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த சவாலையும் எதிர்கொள்ள கடற்படை விமான தளம் தயார் நிலையில் உள்ளது. கடற்படை விமான தளத்தை நவீனப்படுத்தும் வகையில் இதனை கொண்டு வந்துள்ளோம். இது இந்திய கடற்படைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த சமயங்களில் மருத்துவ குழுவினர் மற்றும் நோயாளிகளை அழைத்துச் சென்றது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்றது உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றதில் இந்திய ராணுவம் முக்கிய பங்காற்றியது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்படை தளத்தில் நவீன ரேடார் தொலை தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர காலங்களில் எந்த ஒரு பிரச்னையையும் எதிர் கொள்ள தயார் நிலையில் இருந்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பில் கடற்படை விமான தளம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோர காவல்படை, மீன்வளத்துறை, காவல்துறை, வனத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
கடல் பாதுகாப்பு பிரச்னைகளை சட்டரீதியாக அணுக வேண்டும். 1984-ம் ஆண்டு இந்த ஐஎன்எஸ் பருந்து அமைக்கப்பட்டது. வருகிற பத்தாண்டுகளில் இதனுடைய உட்கட்டமைப்பு நாட்டினுடைய மிக முக்கிய கேந்திரமாக விளங்கும்.
அதற்காக கடற்படை விமான தளத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளினால் நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தபட்டுள்ளது:” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், கமாண்டிங் கேப்டன் விக்ராந் சப்தீஸ், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக், மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் பகவான் ஜெகதீஸ் மற்றும் கடற்படை விமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.