ராஞ்சி: ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவர் நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்க்கண்ட்டின் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் (ஆர்ஐஎம்எஸ்) அனுமதிக்கப்பட்டிருந்தார். லாலுவுக்கு சிறுநீரக பாதிப்பு உட்பட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. டாக்டர் வித்யாபதி தலைமையிலான 7 உறுப்பினர் மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் டாக்டர் வித்யாபதி நேற்று கூறும்போது, “லாலுவின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. எனவே அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளோம். இந்தப் பரிந்துரை சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜார்க்கண்ட் சிறைத் துறை ஐ.ஜி. மனோஜ் குமார் கூறும்போது, “மருத்துவக் குழுவின் பரிந்துரையை ஏற்று லாலுவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணந்து ராஞ்சி சிறை கண்காணிப்பாளர் மேற்கொள்வார்” என்றார். இதையடுத்து லாலு நேற்று இரவு டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.