ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை நேற்று மோசமடைந்தததை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (ஆர்ஐஎம்எஸ்) இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் தீவிர அவசரப் பிரிவில் இரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டார். இதையடுத்து, லாலுவுக்கு பரிசோதனை செய்தபோது அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “லாலு பிரசாத் யாதவ் நேற்று இரவு 9 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.” என்று தெரிவித்தனர்.
இருப்பினும், லாலுவை ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்தவமனைக்கு திரும்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ராஜேந்திர மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. அ.தி.மு.க. ஆட்சியில் 537 அறிவிப்புகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளன- மு.க.ஸ்டாலின் தகவல்