ஆல்வார்
உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மல்கேடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “பஜ்ரங்பலி (ஆஞ்சநேயர்) ஒரு நாட்டுப்புற தெய்வம்,. மேலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்” எனத் தனது உரையில் தெரிவித்தார்.
யோகியின் பேச்சு நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. யோகி மீது நவல்கிஷோர் சர்மா என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். தனது புகாரில் யோகி ஆதித்யநாத் பஜ்ரங்பலியை வணங்கும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதையொட்டி யோகிக்கு எதிராக் காவல்துறையினர் வழக்குப் பதிந்தது.
இந்த வழக்கை தலைமை ஜுடிசியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. யோகி ஆதித்யநாத் மார்ச் 25 ஆம் தேதி உபி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.