குஷிநகர்:
குஷிநகர் மாவட்டம் திலிப்நகர் கிராமத்தில் முகியா தேவி என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்தபோது ஒரு பிளாஸ்டிக் பையில் டோஃபி (இனிப்பு) இருந்ததை கவனித்துள்ளார். அதை தனது பேரப்பிள்ளைகள் 3 பேர் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தை என 4 பேருக்கும் கொடுத்துள்ளார். அந்த இனிப்பை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்துவிட்டனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், 4 குழந்தைளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த வீட்டில் சாப்பிடாமல் வைத்திருந்த ஒரு இனிப்பு துண்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட இனிப்பு, கெட்டுப்போய் விஷத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என தெரிகிறது.
குழந்தைகள் உயிரிழந்தது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.