புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 400 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை முதன்முறையாக எட்டியுள்ளது. இந்த சாதனைக்காக விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நமது தன்னிறைவு இந்தியா பயணத்தில் இது முக்கிய சாதனையாகும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியில் சாதனை படைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களை விட 9 நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா, இலக்கை எட்டியது தொடர்பான விவரங்களையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 46 மில்லியன் டாலர் அளவுக்கும், ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கும், ஒவ்வொரு மாதத்திற்கு 33 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2020-21 நிதியாண்டில், 292 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்த நிலையில், 21022 நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்., மாதம் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ஏப்.,2021 முதல் 2022 ஜன., வரை , இந்தியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே 334 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி நடந்த நிலையில், 12 மாதத்திற்கு முன்பாகவே சாதனை படைத்துவிட்டோம். மார்ச் 31க்குள் 400 பில்லியன் டாலர் என்ற இலக்கை தாண்டிவிடுவோம் என தெரிவித்திருந்தார்.
Advertisement