IPL 2022 Tamil News: கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலமான மற்றும் பணக்கார தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் வலம் வருகிறது. இத்தொடரில் ஒரு வீரர் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கும் பட்சத்தில் அவருக்கு குவியும் வாய்ப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஐபிஎல்லின் கடந்த சீசன்களில் கலக்கிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு அந்த நாட்டு தேசிய அணிகளில் இடம் கிடைத்தது. அவர்களுக்கான ஸ்பான்சர்களும் வந்து குவிந்தன.
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும் அதுவாகத்தான் இருக்கிறது. கடந்த சீசனில் பல இளம் வீரர்கள் களத்தில் தங்கள் முழுத்தினையும் வெளிப்படுத்தி கவனம் பெற்றனர். இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்கி மிரட்டிய வெங்கடேஷ் ஐயர் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார். அவர் போன்ற திறன்மிகுந்த வீரர்களுக்கு ஐபிஎல் பொன்னான வாய்ப்பு.
அந்தவகையில், 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலக்க இருக்கும் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய 5 அன்-கேப்டு (இந்திய சீனியர் அணியில் இடம் பெறாத) இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கவனம் ஈர்க்க காத்திருக்கும் 5 இந்திய வீரர்கள்:
- ராகுல் திரிபாதி
2018-19 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ராகுல் திரிபாதி 8 போட்டிகளில் 504 ரன்கள் சேர்த்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முத்தலிடம் பிடித்தார். அவர் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2018ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். 2020 ஆம் ஆண்டு முதல் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது 2022ம் ஆண்டுக்கான ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.8.5 கோடிக்கு எடுத்துள்ளது.
இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 1,385 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 136.31 ஆக உள்ளது. கொல்கத்தா அணிக்காக மிடில்-ஆடரில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் கவனித்த இந்திய வீரர்களுள் ஒருவராக இருக்கிறார்.
- ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இடம்பிடித்திருந்தார். தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெகா ஏலத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அணிகள் வலைவீசி தேடி வந்த நிலையில், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியது.
தற்போது அணியின் பயிற்சியாளர்களாலும், ஜாம்பவான் வீரர் தோனியாலும் பட்டை தீட்டப்பட்டு வருகிறார். அவர் களமிறங்கும் பட்சத்தில் அனைவரும் கவனத்தையும் ஈர்ப்பார் என்பதில் ஐயமில்லை.
- ஷாருக் கான்
தமிழக வீரரான ஷாருக் கான் உள்நாட்டு அரங்கில் மிகவும் அசாத்தியமான வீரராக உருவெடுத்துள்ளார். அவரது ஃபினிஷிங் திறனால் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அவரை எடுக்க சென்னை அணி தொடர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.9 கோடிக்கு லாவகமாக தூக்கியது.
பவர் ஹிட்டரான ஷாருக் கான் ஐபிஎல்லில் 11 போட்டிகளில் விளையாடி 153 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 134.21 ஆக உள்ளது. கடந்த சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இம்முறை அது அமைந்தால் அவர் அதிரடியால் மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.
- ராஜ் பாவா
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தடம் பதித்த இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் ஆல்ரவுண்டர்களில் பாவாவும் ஒருவர். 6 ஆட்டங்களில் விளையாடிய இவர் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மட்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சு சராசரி 63 ஆக உள்ளது. தற்போது அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
- ஷிவம் மாவி
2018 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியில் மிகச்சிறப்பான பங்கை அளித்திருந்தார் ஷிவம் மாவி. அதுமுதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்து வரும் அவர் காயம் காரணமாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். எனினும் சில ஆட்டங்களில் தனது அற்புதமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் அசத்தி இருந்தார்.
ஷிவம் மாவியை தற்போது நடந்த முடிந்த மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியே (ரூ. 7.25 கோடி) மீண்டும் வாங்கியுள்ளது. அவர் 26 ஐபிஎல் போட்டிகளில் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் தனது திறனை நிரூபிக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“