புதுடெல்லி: ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நாம் மீண்டும் உறுதியேற்போம் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டு களாக தண்ணீர் தொடர்பான உரை யாடல் ஒரு வெகுஜன இயக்கமாக மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தண்ணீரை பாதுகாப்பதற்காக உழைக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அவர் பாராட்டியுள்ளார்.
தண்ணீரின் முக்கியத்துவம் கருதி, கடந்த 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 –ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. நீர்வளப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அதுகுறித்து மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவதும் இதன் நோக்க மாகும். இதையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “உலக தண்ணீர் தினத்தில், ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்போம் என்ற உறுதிமொழியை மீண்டும் உறுதி செய்வோம். நம் நாட்டில் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நாடு மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, தண்ணீர் தொடர்பான உரையாடல் ஒரு வெகுஜன இயக்கமாக மாறியிருப்பதும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தண்ணீரை சேமிப்பதற்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை நான் பாராட்ட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த தனது முந்தைய செய்திகள் மற்றும் இந்த விஷயத்தில் தனது அரசின் முயற்சிகள் பற்றிய சிறு வீடியோவையும் பிரதமர் தனது பதிவுடன் வெளியிட்டுள்ளார்.
– பிடிஐ